ASIKNEWS -
you're reading...
Medicine

மரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி

மரண பயமற்ற வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் 40, 50 வயதைக் கடந்தவர்கள் – அவர்கள் எவ்வளவு நல்ல உடல் நலம் பெற்றிருந்தாலும் – பின் மனதில் இந்த மரண பய ரேகை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாக்குக்கு ஏற்ற உணவு, நேரத்தில் உணவு உட்கொள்ளும் வாய்ப்பு, போதுமான தூக்கம், காலையிலோ அல்லது மாலையிலோ உடற்பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் ஆகியன இருந்தும், நாம் வளர்த்த உடலையே நம்ப முடியாத ஒரு வாழ்க்கை பலருக்கும் உள்ளது.

எனவே மரண அச்சத்தை தாண்டிய உறுதியான உள்ளம் பெற ஒரு வழி நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. நமக்குள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மரண அபாயம் (Risk of Death)யாருக்கெல்லாம் அதிகம் உள்ளது என்பது குறித்து மருத்துவ உலகம் பல ஆய்வுகளைச் செய்துள்ளது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு அளவு கோல்களில் மிகவும் நம்பத்தக்கதாக கருதப்படுவது உடல் எடைக் குறியீடு (Body Mass Index – BMI).

ஐ.நா. உலக நல அமைப்பு (WHO) அங்கீகரிக்கப்பட்ட உ.எ.கு. பல்வேறு ஆய்வுகளுக்கு அடிப்படையாகிறது. மரண அபாயம் மட்டுமின்றி, உடல் நலக் குறியீடாகவும், வறுமையை அளவிடும் அடிப்படையாகவும் உ.எ.கு. பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்துவரும் சமூகங்களை மதிப்பீடு செய்யும் பணியில் நீண்ட காலம் ஈடுபட்டவர் மருத்துவர் பினாயக் சென் (மாவோயிஸ்ட் என்று கூறி இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்). இவர் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, உ.எ.கு. ஒருவருக்கு 18க்கும் குறைவாக இருந்தால் போதுமான சத்துணவு இன்றி வாழ்ந்து வருகிறார் என்று பொருள். இந்த நிலையில் உள்ளவர்கள், இந்தியாவில் ஆண்கள் 33 விழுக்காடு, பெண்கள் 37 விழுக்காடு, குழந்தைகள் 45 விழுக்காடு என்றும் கூறினார். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த குறியீட்டை கண்டுபிடிப்பது எப்படி?

உ.எ.கு. என்பது ஒருவருடைய உடல் எடையை, அவருடைய உயர அளவை (மீட்டரில்) வர்க்கமாக்கினால் (Square) வரும் எண்ணைக் கொண்டு வகுத்தால் வரும் ஈவை, 100ஆல் பெருக்கினால் வருவதே அவருடைய உடல் எடைக் குறியீடாகும். உதாரணத்திற்கு ஒருவருடைய எடை 80 கி.கி., உயரம் 1.82 மீட்டர் என்றால், அவருடையை உடல் எடைக் குறியீடு கீழ்கண்டவாறு அளவிடப்பட வேண்டும்:

1.82 x 1.82 = 3.31

80 / 3.31 = 24.17

இந்த 24.17 என்பதே அந்த நபரின் உடல் எடைக் குறியீடாகும். இவர் நமது நாட்டின் கணக்குப்படி நல்ல சத்துணவு சாப்பிட்டு நலமாக இருப்பவர்.

ஆனால் அயல் நாடுகளில் இவரை நல்ல உடல் நலத்தோடு உள்ளவர் என்று கூறுவது மட்டுமின்றி, இவருக்கு மரண அபாயம் (Death Risk) இல்லாதவர் என்றும் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உ.எ.கு. 20 முதல் 24.9 வரையிலுள்ளவர்கள் மரண அபாயமற்றவர்கள் என்றும், 25 முதல் 29.9 வரை உள்ளவர்களை மரண அபாயமற்றவர்கள் என்றாலும் கூட, அவர்கள் கூடுதல் உடல் எடை கொண்டவர்களாக உள்ளதால் அந்த அச்சுறுத்தல் உள்ளவர்கள் என்றும், 30க்கும் அதிகமாக உள்ளவர்கள் கொழுப்புடல் கொண்டவர்கள், மரண அபாயம் அதிகமுள்ளவர்கள் என்றும், 35க்கும் அதிகமான உ.எ.கு. கொண்டவர்கள் மரண ஆபத்து மிக அதிகமானவர்கள் என்றும் கூறியுள்ளது.

ஐ.நா.வின் உலக நல அமைப்பு (World Health Organization – WHO) 18.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களை நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் என்று கூறுகிறது. இது சத்துணவின்படியும், மரண அபாயமற்ற நிலையிலும் சரியான எடையாக கொள்ளப்படுகிறது. பொதுவாக உலக நாடுகள் பலவற்றில் 20 முதல் 24.9 வரை உடல் நலத்திற்கான அளவாக கொள்கின்றன.

அமெரிக்காவின் தேச புற்றுநோய் கழகமும், தேச நல்வாழ்வுக் கழகமும் உ.எ.கு. 30க்கும் அதிகமானவர்கள், அதாவது எடை மிக அதிமாக உள்ளவர்கள், உடல் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் (Obesity) உடல் நலக் கோளாறு அல்லது மரண ஆபத்து அதிகம் உள்ளவர்களெனக் கூறுகின்றனர்.

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல், 22.5 முதல் 24.9 வரையிலான உ.எ.கு. உள்ளவர்கள் (சாராசரியான) நீண்ட காலம் வாழ்பவர்களாகவும், அதே நேரத்தில் அதற்கு மேற்பட்ட உ.எ.கு. உள்ளவர்கள் மரண அபாயமுடையவர்களாக இருப்பதையும் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோய், இதய நோய், வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் அதிகம் பேர் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களே என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. எனவே உடலில் உள்ள கொழுப்பின் அளவை உ.எ.கு. பெருமளவிற்கு சரியாக காட்டும் கண்ணாடியாகவே உள்ளது என்பது பொதுவான, ஒப்புக்கொள்ளப்பட்ட மருத்துவக் கருத்தாக உள்ளது.

இந்த அடிப்படையில் உ.எ.கு. எந்த அளவிற்கு மரண ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது என்று ஒரு அட்டவணை கூட வெளியிடப்பட்டுள்ளது. இங்கல்ல, அமெரிக்காவில். அதன் விவரம்:

உ.எ.கு. 22.5 முதல் 24.9 வரை உள்ளவர்களைக் காட்டிலும், 30 முதல் 34.9 வரையுள்ளவர்கள் இதய நோய், பக்கவாதம் ஆகியன போன்றால் மரணமடையும் சாத்தியம் 44% அதிகமுள்ளது.

35 முதல் 39.9 வரையிலான உ.எ.கு. கொண்டவர்களுக்கு மரண சாத்தியக்கூறு 88% உள்ளது என்பதை தங்கள் ஆய்வுக் காலத்திலேயே உறுதி செய்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

40 முதல் 49.9 உ.எ.கு. கொண்டவர்களுக்கு மரண ஆபத்து 250 விழுக்காடு அதிகம் உள்ளதெனக் கூறும் அந்த ஆய்வு, மிக சரியான உ.எ.கு. கொண்டவர்களை விட, அதைவிட கூடுதலாக 5 புள்ளிகள் கூட கூட, மரண ஆபத்து 31 விழுக்காடு வீதம் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்விற்கு தலைமை வகித்த அமி பெர்ரிங்டன் கன்சாலஸ் இவ்வாறு கூறியுள்ளார், “19 வெவ்வேறு ஆய்வுகளில் பெறப்பட்ட 15 இலட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்தபோது மரண ஆபத்திற்கும் உ.எ.கு.க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை உறுதி செய்தோம். புகைப் பழக்கம் கொண்டவர்கள், அவர்களுக்கு ஏதாவது ஒரு நோயும் இருந்தால், இந்த கொழுப்பு அதிக இருப்பின் (Obesity) காரணமாக மரண ஆபத்து அதிகமாக இருக்கிறது.

இந்த ஆய்வின் போது சோதிக்கப்பட்ட நபர்களின் அன்றாட பணிகள், அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், புகைப்பது, குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் ஆகியனவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பொதுவாக 50 வயதிற்கு அதிகமானவர்களுக்கே இந்த மரண ஆபத்து என்பது மேற்கண்ட உ.எ.கு. அடிப்படையில் பார்க்கும் போது அதிகம் உள்ளதென கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் இன்னும் சில உடல் நல மருத்துவ நிபுணர்கள் உ.எ.கு. மட்டுமே மரண ஆபத்தை தெளிவாக காட்டும் குறியீடாக கொள்ள முடியாது என்று கூறுவது மட்டுமின்றி, அது சில நேரங்களில் திசை திருப்புவதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, 25 உ.எ.கு. உள்ளவர் ஒரு தடகள வீரராக இருந்தால்,அவரைப் பொறுத்தவரை அந்த உ.எ.கு. மரண ஆபத்திற்கான சரியான குறியீடாக இருக்காது என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் எந்த ஒரு உடல் இயக்கத்தை முறைபடுத்தும் பயிற்சியோ, பணியோ அற்றவர் 25 உ.எ.கு. குறைவாக இருந்தாலும் அவருக்கு மரண ஆபத்து அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர். ஆயினும் இவர்களில் எவரும் உ.எ.கு. என்பது பயன்றறது என்றோ, வழிகாட்டக் கூடியதல்ல என்றோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்:

உ.எ.கு.வை கண்டுபிடிக்க வேண்டும். அது 30க்கும் குறைவாக இருக்கும் நிலையில், நாமே உடல் பயிற்சி, நடைப் பயிற்சி, இயன்றால் ஓடும் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி போன்றவற்றில் ஏதானும் ஒன்றை அன்றாட வாழ்க்கை முறையாக்க வேண்டும்.

செய்யும் பணிக்கு ஏற்ற அளவிற்கு உணவை எடுத்துக்கொள்வது, அதிலும் குறிப்பாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அளவோடு கொள்வதில் குறியாக இருக்க வேண்டு்ம்.

புகை நமக்குப் பகை என்பதிலும், குடி குடியைக் கெடுப்பதோடு நம் உடலையும் கெடுக்கும் என்பதிலும் தெளிவான மன நிலை பெற வேண்டும். பார்ட்டி என்க்கு பகை என்ற மன நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

வாரம் ஒரு முறை வீட்டில் மாமிச உணவுகளை சேர்த்துக் கொண்டு, பிறகு உடல் உழைப்பு அல்லது பயிற்சிக்குத் தக்கவாறு அட்டவணைப்படுத்தி உணவை உட்கொள்ள வேண்டும்.

அதற்காக உணவைக் கண்டு பயந்து நடுங்கி, தேவையில்லாமல் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி எஃப். டி.வி.யில் வரும் ஃபிகர்களைப் போல் ஒல்லியாகிவிடக் கூடாது.

உ.எ.கு. 30க்கும் மேல் இருப்பவர்கள் நன்கு அறிமுகமான மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவையாவும் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய விடயம் என்பதை கருத்தில்கொண்டு கடைபிடிக்க வேண்டும்.

Advertisements

About asik5678

Don't care about others be honest

Discussion

Comments are closed.

Hemant Karkare ji

He is a IPS officer in Indian state of Maharashtra. He is bravest and honest police officer in india.
Hemant Karkare laid down his lives fighting terrorists during the Mumbai attacks, on 27 November 2008.

Currency Converter

Blog Stats

  • 258,877 hits

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 38 other followers

Advertisements
%d bloggers like this: